Published : 20 Sep 2023 06:05 AM
Last Updated : 20 Sep 2023 06:05 AM

எடைக்கற்களில் விதிமீறல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை: தொழிலாளர் நல ஆணையர் அறிவிப்பு

சென்னை: சட்டமுறை எடையளவு விதிகளின்கீழ் ஆய்வு செய்யும் போது எடைக்கற்களில் விதிமீறல்கள் காணப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சந்தைகள், சாலையோரம், நடைபாதைகளில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், மீன் மார்க்கெட்கள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றில் எடை குறைவாக விநியோகம் செய்தல், முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாமல் எடையளவுகளை வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் போன்ற புகார்கள் வந்தன.

இது தொடர்பாக சட்டமுறை எடையளவு அமலாக்க அதிகாரிகளால், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் 1,358 கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 292 கடைகளில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், தபால் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் முத்திரையிடப்படாத எடையளவுகளை வைத்திருத்தல் மற்றும் சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது போன்றவை தொடர்பாக 1,132 ஆய்வுகள் மேற்கொண்டு 315 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

அதேபோல், பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் மாநிலம் முழுவதும் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மளிகைக்கடைகள், இறக்குமதியாளர்கள், பொட்டலமிடுபவர்கள் என பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட உரிய அறிவிப்புகள் இல்லாதிருத்தல், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற முரண்பாடுகள் தொடர்பாக, 1,117 ஆய்வுகள் மேற்கொண்டதில், 129 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இவற்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் நடத்தப்படும். சட்டமுறை எடையளவுகள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் முரண்பாடுகள், விதிமீறல்கள் காணப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x