

சென்னை: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பாலின் தரத்துக்கு ஏற்ற விலை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலமாக, அனைத்து பால் உற்பத்தியாளர்கள் பயனடையச் செய்ய வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
பால்வளத் துறை துணைப் பதிவாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யும்போது, உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதை அனைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலும் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் 10,771 பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவைபால் உற்பத்தியாளர்களுக்கு தரத்தின் அடிப்படையில் நியாயமானவிலையை வழங்குவதை உறுதிசெய்வதோடு, பால் உற்பத்தியாளர்கள் மேம்பாட்டுக்கும், கால்நடைபராமரிப்புக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரம் ஒருமுறை பால் தொகை பட்டுவாடாசெய்வது நிறைவேற்றப்பட்டது விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோல, உடனடி ஒப்புகை மூலம் விவசாயிவழங்கும் பாலுக்கு தரத்துக்கு ஏற்ற விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, கடந்த 3 மாதங்களாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்மூலமாக, விவசாயிகள் வழங்கும் பாலுக்கு தோராயமான விலை என்ற நிலை மாறி தரத்துக்கு ஏற்ற விலையை ஆவின் வழங்கி வருகிறது. இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த, அனைத்து பால் உற்பத்தியாளர்கள் பயனடையச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் சு.வினீத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.