

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையில் `தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம்' என்று திமுக அறிவித்திருந்தது.
இதன்படி கடந்த செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் `கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' தொடங்கப்பட்டது. கடுமையான நிதி நெருக்கடியிலும் வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளுக்கு முந்தைய நாளிலேயே இல்லத்தரசிகளின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்து சேர்ந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டிருக்கும் இந்த முன்னோடித் திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் பேசும்போது, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துபணத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதே இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பு. இத்திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் இதற்காக தனியான முகாம்கள் நடத்தப்பட்டன. வருவாய்த் துறையினர் மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததால்தான் திட்டம் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் உரிமைத் தொகை அனுப்பப்பட்ட விவரம் செல்போன் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பித்துப் பயன்பெற இயலாதவர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள் ளது. பயன்பெற இயலாத விண்ணப்பதாரர்கள் மேல் முறையீடுசெய்யவும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த மேல்முறையீட்டை வருவாய் கோட்டாட்சியர் மூலம் தீர்த்துவைக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
எல்லா மாற்றங்களும் தமிழ்நாட்டிலிருந்தே தொடங்குகின்றன என்பதற்கிணங்க கலைஞர் மகளிர் உரிமைத் தொகைப் பயணத்திலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அழுத்தமாக அடியெடுத்து வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது