

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை, நெருக்கடியை போக்கும் வகையில், 2007-ம்ஆண்டு வல்லூர் அனல் மின்நிலையம் தொடங் கப்பட்டு, 2011-ம்ஆண்டு முதல் செயல்படுகிறது.
இந்த அனல்மின் நிலையத்தில் சுமார் 2,000 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பொதுத் துறை நிறுவனமான இந்நிறுவனத்தில் இந்த நிலை நீடிப்பது அடிப்படை சட்டவிதிகளுக்கு விரோதமானது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து, பல பிரிவுகளில் ஒப்பந்தமுறையில் பணியாற்றி வரும்2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு சட்டப்படியான சலுகைகளை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.