திருவள்ளூர் | தரமற்ற கோழி இறைச்சி வைத்திருந்த ஷவர்மா கடைக்கு ‘சீல்’

திருவள்ளூர் | தரமற்ற கோழி இறைச்சி வைத்திருந்த ஷவர்மா கடைக்கு ‘சீல்’
Updated on
1 min read

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்திய ஆய்வில், திருவள்ளூரில் தரமற்ற கோழி இறைச்சி வைத்திருந்த ஷவர்மா கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து,சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியனின் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வு, பூந்தமல்லி, செங்குன்றம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துரித உணவகங்கள், ஷவர்மா கடைகளில் நடந்தது. இந்த ஆய்வின் போது, ஷவர்மாவை தரமான கோழி இறைச்சி உள்ளிட்டவற்றால் தயாரிக்க வேண்டும் என, ஷவர்மா கடை மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

திருவள்ளூர், ஜெ.என்.சாலை, பஜார் சாலை, பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, துப்புரவு அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் சுதர்சன் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

25 துரிதஉணவகங்கள், 6 ஷவர்மா கடைகளில் நடந்த இந்த ஆய்வில், பெரியகுப்பத்தில் உள்ள ஒரு ஷவர்மா கடை உரிமம் இன்றி செயல்பட்டதோடு, தரமற்ற கோழி இறைச்சிகளை வைத்திருந்தது தெரிய வந்தது. ஆகவே, நகராட்சிஅதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்ததோடு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in