Published : 20 Sep 2023 06:25 AM
Last Updated : 20 Sep 2023 06:25 AM

கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கால நிர்ணயம்; பணி விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் - உயர் நீதிமன்றம்

சென்னை: கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கால நிர்ணயம் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணிக்கான விதிகளில் தேவையான திருத்தங்களை கொண்டுவர 2 மாதங்களில் குழு அமைத்து ஆராய்ந்து கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த நித்யா,கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்ததனது கணவர் வேலுச்சாமி கடந்த2017-ம் ஆண்டு திடீரென இறந்ததால் தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி மனு தாக்கல் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல சேலத்தைச் சேர்ந்தகார்த்திகேயன் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்த தந்தை வேலாயுதம் கடந்த 2006-ம் ஆண்டு இறந்துவிட்டதால் அந்த பணியை தனக்குவழங்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். தொட்டியம் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் பணிபுரிந்த அண்ணாமலை 2014-ம் ஆண்டு இறந்ததால் கருணை அடிப்படையில் வேலை வழங்கக்கோரி அவருடைய மகன் அஜித்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் துறையில் பணிபுரிந்த கோவிந்தராஜன் கடந்த 2014-ம் ஆண்டு இறந்ததால் கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக்கோரி அவருடைய மகன் அன்பரசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி திடீரென இறந்தஅரசு ஊழியர்களின் வாரிசுகளுக்குகருணை அடிப்படையில் உடனடியாக பணி வழங்கப்படாததால் அவர்களின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பரிதவித்து வருவதாகவும், இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் டி.ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்கும் திட்டம் என்பதுஉயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களின் வேதனையில், துயரத்தில் பங்கெடுத்து, அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கைகொடுப்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

17 ஆண்டுகள் காத்திருப்பு: ஆனால் தமிழகத்தில் கருணைஅடிப்படையில் பணி வழங்க 14 முதல் 17 ஆண்டுகள் வரைகாத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் தள்ளப்பட்டுள்ளது வேதனைக்குரியது.

பொதுவாக கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது மாவட்ட அளவிலும், துறை ரீதியாகவும் சீனியாரிட்டி பட்டியல் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சீனியாரிட்டியால் அரசு துறைகளில் காலியாக உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை நிரப்ப பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மாநில அளவில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து எந்த மாவட்டத்தில் காலியிடம் உருவாகிறதோ அந்த இடத்துக்கு கருணை அடிப்படையில் பணி கோருபவர்களை நியமிக்கலாம்.

அதேபோல கருணை அடிப்படையில் பணி கோரும்போது காலியிடம் இருந்தால் துறைத் தலைவர்களே 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டுமென விதிகளில் கூறப்பட்டு இருந்தாலும், உரிய காலியிடம் இல்லை என்றால் 3 மாதங்களில் அந்தந்தமாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க வேண்டுமென உள்ளது.

ஆனால் மாவட்ட ஆட்சியர் எத்தனை நாட்களில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டுமென்பதற்கு எந்த கால நிர்ணயமும் இல்லை. இதனால் சீனியாரிட்டிக்காக பல ஆண்டுகள் காத்திருக்க நேரிடுவதால் இந்ததிட்டத்தின் நோக்கமும், குறிக்கோளும் கேள்விக்குறியாகி விட்டது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க உரிய கால நிர்ணயம் செய்யும் வகையில் அரசுப் பணிகளுக்கான விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள 2 மாதங்களில் குழு அமைத்து ஆராய்ந்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.அதை தமிழக அரசு செய்யும் என இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

அத்துடன் இந்த மனுதாரர்களுக்கு 6 வாரங்களில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 மாதங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் டிச.20-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x