

சென்னை: ஓமன் விமானத்தில் 113 பயணிகள் கடத்தல் குருவிகளாக செயல்பட்டு, ரூ.14 கோடி மதிப்பிலான தங்கம், ஐபோன், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்களை கடத்திவந்த விவகாரத்தில், சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த சுங்கத் துறை அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 14-ம்தேதி காலை 8 மணிக்கு சென்னைவந்தது. இந்த விமானத்தில் தங்கம், ஐபோன், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர்.
விமானத்தில் வந்த 186 பேரையும் நிறுத்தி தீவிர சோதனை நடத்தப்பட்டது. கடத்தலில் தொடர்பு இல்லாத 73 பயணிகள் மட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். எஞ்சிய 113 பேரிடமும் நள்ளிரவு வரை விசாரணை நடந்தது. உள்ளாடைக்குள் தங்கப் பசைகளை மறைத்தும், சூட்கேஸ் லைனிங்கில் தங்கத்தை ஸ்ப்ரிங் கம்பியாக மாற்றியும் கடத்தி வந்தது தெரியவந்தது.
மொத்தம் ரூ.14 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கம், 120ஐபோன்கள் உட்பட 204 செல்போன்கள், லேப்டாப், சிகரெட் பண்டல், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ ஆகியவை கைப்பற்றப்பட்டன. 113 பேர் மீதும் சுங்க சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஒரே விமானத்தில் 113 பேர் கடத்தல் குருவிகளாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் பணியில் இருந்த சிலர் இதற்கு உடந்தையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, அப்போது விமான நிலையத்தில் பணியில் இருந்த சுங்கத் துறை கண்காணிப்பாளர்கள் 4 பேர், ஆய்வாளர்கள் 16 பேர் என மொத்தம் 20 பேரை சென்னையில் உள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக இடமாற்றம் செய்து விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சுங்கத் துறையில் மேலும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.