Published : 20 Sep 2023 06:00 AM
Last Updated : 20 Sep 2023 06:00 AM

12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 12 வார காலத்துக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வாடகை ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஆட்டோ ஓட்டுநர்களால் அதிககட்டணம் வசூலிக்கப்பட்டு பயணிகள்ஏமாற்றப்படுவதை தடுக்க, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மீட்டர் பொருத்தியிருந்தும் அவற்றை செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும். மீட்டரை செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையில் நிலையற்ற தன்மைநிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது.

மேலும், ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்றாமல், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாற்றும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்குதலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில அரசு பிளீடர் பி.முத்துக்குமார், போக்குவரத்து துறை இணைஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் சார்பில், பல்வேறுதரப்பினரிடம் இருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் உள்ள கட்டண விகிதங்களையும் கருத்தில்கொண்டு தமிழகத்தில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும். அதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். மேலும், கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்துக்குட்பட்டு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x