Published : 23 Dec 2017 08:40 am

Updated : 23 Dec 2017 09:08 am

 

Published : 23 Dec 2017 08:40 AM
Last Updated : 23 Dec 2017 09:08 AM

2ஜி வழக்கில் வெற்றிக்கு கருணாநிதி தந்த ஊக்கமே காரணம்: நன்றி தெரிவித்து ஆ.ராசா உருக்கமான கடிதம்

2

2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு கடந்த 7 ஆண்டுகளாக திமுக தலைவர் கருணாநிதி தந்த ஊக்கமே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


நித்திரை நிலைகொள்ளாத இந்த நடுநிசியில், தலைநகரின் கடுங்குளிரில் உங்கள் வார்த்தைகளின் ஒலிக்காக என் செவிகள் உண்ணாநோன்பு இருக்கின்றன. அலைவரிசைப் புயலின் கோரத் தாக்குதல், தனி மனிதர்களை மட்டுமல்ல, தத்துவார்த்தம் உள்ள ஒரு இயக்கத்தையும் களங்கப்படுத்தியது. இந்த 7 ஆண்டுகளில் எத்தனை இழிச் சொற்கள், ஏளனங்கள்?

உலக வரலாற்றில் தனிமனித தாக்குதல் அன்றாட நிகழ்வுகள். ஆனால், அலைக்கற்றை தாக்குதல் தனி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, நிறுவனங்களால் நிகழ்த்தப்பட்டவை. மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ), நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) உள்ளிட்ட நிறுவனங்கள் தொடுத்த தாக்குதல்கள் நிர்வாக அமைப்பு முறையில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே புதியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்த நடத்தப்பட்ட சதியே அலைவரிசை வழக்கு. இதை அறியமுடியாமல் போனதுதான் அந்த ஆட்சியின் அவலம். உளவுத்துறை கையில் இருந்தும் இதை உணரமுடியாத அரசின் நிலைதடுமாற்றத்தில் சில நிறுவனங்கள் தறிகெட்டு ஓடின. இந்திய அரசியலில் திமுகவின் ஆளுமையைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகளும் இதன் பின்னணியில் இருந்தன.

கடந்த 2010 பிப்ரவரி 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், “2012-ம் ஆண்டுக்குள் 60 கோடி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கையும் தாண்டி, மாதந்தோறும் 2 கோடி இணைப்புகளை வழங்கி, 2009-ம் ஆண்டே 57 கோடி இணைப்புகளை எட்டி தொலைதொடர்புத் துறை சாதனை புரிந்துள்ளது” என்று குறிப்பிடடார். அலைவரிசை வணிகத்தில் நடந்த புரட்சியே இதற்கு காரணம்.

அலைவரிசை வணிகத்தில் இருந்த ஒருசில நிறுவனங்களின் ஏகபோகத்தை தகர்த்து அனைவரது கரங்களிலும் வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த புரட்சியை, ‘குற்றம்’ என பெயர் சூட்டி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் இந்த தேசத்தில் மட்டும்தான் சாத்தியம். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று கணக்கு சொன்னவர்களின் வஞ்சகத்தால் உங்கள் 80 ஆண்டுகால பொதுவாழ்வையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு யார் தண்டனை தருவது? பொதுத் தொண்டில் தனிமனித மான, அவமானம் போகலாம்.

ஆனால் ஓர் இயக்கத்தையே சிதிலமடையச் செய்ய தொடுக்கப்பட்ட முயற்சியில், சிலர் பெற்ற தற்காலிக வெற்றியால் ஏற்பட்ட மான, அவமானங்களுக்கு யார் பொறுப்பு?

அறிவுஜீவிகளும், கொள்கைவாதிகளும், இன்னும் இருப்பதாக நம்பப்படும் இடதுசாரிகளும்கூட அலைவரிசை அரசியலை தனியுடைமை ஆக்கிக்கொண்டு தடந்தோள் தட்டியது இன்னுமொரு தாளமுடியாத தத்துவ சோகம். இங்கே குறை கூறிய எவருக்கும் நெஞ்சம் என்ற ஒன்றே இல்லை. என்றாலும் நமக்கு நீதி கிடைத்துள்ளது.

அரசு, அரசமைப்பு நிறுவனங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு நடத்திய இந்த அலைவரிசை பயணத்தில் நான் கரைந்துவிடாமல் இருக்க, என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள். இந்த நன்றி உணர்ச்சியோடு தங்கள் காலடியில் இந்த தீர்ப்பை வைத்து வணங்குகிறேன். ‘உண்மையை மறைப்பது, விதையை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது’ என்ற தங்களது வரிதான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு ஆ.ராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x