Published : 20 Sep 2023 06:20 AM
Last Updated : 20 Sep 2023 06:20 AM

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் குமரி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்

நாகர்கோவில்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற பெற குமரி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் மீது களஆய்வு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏராளமான குடும்பத தலைவிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அங்கு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தில் இருந்த ஊழியர்களிடம் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டனர். அவர்கள் ஆன்லைனில் விவரம் பார்த்து பதில் கூறினர். வருமான வரி, மின்கட்டணம், கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தங்களை விட வருவாய் கூடுதலாக உள்ளவர்கள், செல்வந்தர்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைப்பதாக அரசு உதவி மையங்களில் இருந்த ஊழியர்களிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டாறு, கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலங்களிலும், நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையங்கள் நேற்று முதல் செயல்பட்டன.

இதற்கிடையில் மறு விண்ணப்பம் செய்ய ஏராளமோனார் இ-சேவை மையங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு மறு விண்ணப்பம் செய்வதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x