Published : 22 Dec 2017 04:26 PM
Last Updated : 22 Dec 2017 04:26 PM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் காலநீட்டிப்பு?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பணி நிறைவு பெறாததால், மேலும் கால நீட்டிப்பு அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 அன்று உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்.25-ல் தமிழக அரசு வெளியிட்டது. விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். இரண்டு மாத காலத்தில் விசாரணையை முடிக்க ஆணையத்துக்கு பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ஜெயலலிதா விசாரணை ஆணையத்திற்கானா அலுவலகத்தில் நவம்பர் 22-ம் தேதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார். முதல் நாள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் ஆஜராகி சில ஆவணங்களை அளித்தார். பின்னர் திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் ஆஜாராகி ஜெயலலிதா கைரேகை சம்பந்தமான தனது சந்தேகத்தை எழுப்பி தடயவியல் விசாரணை கோரினார். அவரை தொடர்ந்து ஜெ. தீபா, தீபக், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் , மருத்துவர் தினேஷ் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஆயிரக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் , ஏராளமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் விசாரணையை இரண்டு மாத காலத்திற்குள் முடிப்பது இயலாத காரியம். விசாரணை முழுமை பெறாத நிலையில் விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் வரும் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் விசாரணை தொடர்ந்து நடக்க ஏதுவாக கால நீட்டிப்பு வழங்கப்படலாம். மேலும் ஒரு மாதகாலம் கால நீட்டிப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. அதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x