Last Updated : 18 Sep, 2023 02:32 PM

 

Published : 18 Sep 2023 02:32 PM
Last Updated : 18 Sep 2023 02:32 PM

16-வது நிதிக் கமிஷனில் புதுச்சேரி சேர வேண்டும்: ஆளுநரும், முதல்வரும் தவறவிட்டால் இனி 7 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை

புதுச்சேரி: 16-வது நிதிக்கமிஷனில் புதுச்சேரி சேர இருக்கும் நல்வாய்ப்பை ஆளுநர் தமிழிசையும், முதல்வர் ரங்கசாமியும் பயன்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாய்ப்பை தவறவிட்டால் இனி 7 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என்ற இக்கட்டான தருணத்தில் புதுச்சேரிக்கான நிதிச்சூழல் இருக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.இது, புதுச்சேரி வளர்ச்சியின் வேகத்தை, குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து மெதுவாக்குகிறது. மத்திய நிதிக் கமிஷனில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

நிதிக் கமிஷனில் புதுச்சேரியைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்க, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து தர வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசம், நிதி விஷயத்தில் முன்னேற்றம் பெற மத்திய அரசின் ஆதரவு மிகவும் முக்கியமானது. இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 280-வது பிரிவின் அரசியலமைப்புத் திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர் நிர்வாக காரணங்களுக்காக மத்திய அரசால் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

பிரிக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களும் 15-வது மத்திய நிதிக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், சட்டப்பேர வையுடன் இயங்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை இதுவரை மத்திய நிதிக் குழுவில் சேர்க்கவில்லை.

‘இந்தியாவின் 16-வது நிதிக்குழு வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படும்’ என்று மத்திய நிதித்துறைச் செயலர் சோமநாதன் தெரிவித்துள்ளார். இக்குழு மத்திய அரசின் நிதியை மாநிலங்களுக்கு எந்த விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும் என்ற கோட்பாடுகளை தயாரித்து கொடுக்க உள்ளது.

இக்குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அதாவது 2030 வரை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதியுதவி அளிக்க உள்ளது.

நிதிக்கமிஷனில் புதுச்சேரி இல்லாததால், இதர மாநிலங்களைப் போன்று உரிமையாக கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் மாநிலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, நீண்ட காலமாக ஒருவித தத்தளிப்பில் இருந்து வருகிறது.

புதுச்சேரியின் நிதி ஆதார பிரச்சினை இது என்பதால், புதுச்சேரியை 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை எல்லைக்குள் கொண்டு வருவதற்கு வேண்டிய அனைத்துநடவடிக்கைகளையும் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் எடுத்து மத்திய அரசிடம்,மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

16-வது நிதிக் குழுவை அமைக்கும்அரசாணை வெளியிடுவதற்கு முன்பாகநவம்பர் மாதம் மத்திய அரசு, புதுச்சேரிமாநிலத்தின் கோரிக்கையை ஏற்க டெல்லி யில் முகாமிடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுபற்றி நிதித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 280 (3)-ன் படி நிதிக்குழு நியமிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு நிதியு தவி அளிக்கப்படுகிறது. இதில் ஒரு சிறிய திருத்தத்தை மட்டும் செய்தாலே புதுச்சேரி பயனடையும். அதாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 280 (3)-ல் உள்ள மாநிலம் என்ற பதத்தில், ‘சட்டப்பேரவை உள்ள யூனியன்பிரதேசங்களும் அடங்கும்’ என்ற திருத்தத்தைக் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அல்லது. ‘16-வது நிதிக்குழுவின் வரையறைகளில் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசங் களுக்கும் நிதிக் குழுவின் பரிந்துரைகள் பொருந்தும்’ என்று கூற வேண்டும்.

இதுவரை இதை செய்யாததால்தான் மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. புதுச்சேரியில் சட்டப்பேரவை இருப்பதால் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவிலும் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. மத்திய வரி வருவாய்க்கு புதுச்சேரி பங்கு அளித்த போதும் மத்திய வரியில் இருந்து புதுச்சேரிக்கு எந்தவிதப் பங்கும் கிடைப்பதில்லை” என்று தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "நிதிக்குழுவில் இல்லாததால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி எண் 275-ன் கீழ்வழங்கப்படும் மானிய உதவி புதுச்சேரிக்கு வழங்கப்படுவதில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, கடன் நிவாரணம், இயற்கை சீற்ற நிதி, சீரமைப்பு மானியங்கள், கல்வி மானியம், மாநிலச் சிறப்பு தேவைகளுக்கான நிதி, திட்ட உதவி போன்ற எதுவும் கொடுக் கப்படுவது இல்லை.

இது ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தி, நாம் மூலதனச் செலவை செய்ய முடியாமல் பொருளாதார வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் இழந்து வருகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு தற்போது முயற்சித்தால் புதுச்சேரியை 16-வது நிதிக்குழு பரிந்துரை வரம்புக்குள் கொண்டுவர முடியும்" என்கின்றனர்.

இதுபற்றி முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் கூறுகையில், "பிரதமர் உதவியோடு புதுச்சேரியை 16-வது நிதிக்குழுவில் சேர்க்க முயற்சிக்க வேண்டும். யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீர்15-வது நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டது. அதேபோல் புதுச்சேரி மாநிலம் ஆகும்போது அதுதானாகவே நிதிக்குழுவில் சேர்ந்து விடும்.

அதுவரை நாம் காத்திராமல் மத்திய நிதி அமைச்சரை ஒரு சாத்தியக்கூறு அறிக்கையோடு சந்தித்து, நமது கோரிக்கையை உடனடியாக வலியுறுத்த வேண்டும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் இன்னும் 7 ஆண்டுகளுக்கு நாம் நிதிக் குழுவின் வரம்புக்குள் செல்வது கடினம்" என்று சுட்டிக்காட்டுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x