Last Updated : 27 Dec, 2017 03:31 PM

 

Published : 27 Dec 2017 03:31 PM
Last Updated : 27 Dec 2017 03:31 PM

மின் கட்டண நிர்ணயம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்; அமைப்பினர் எதிர்ப்பால் கூச்சல் குழப்பம்

 

2018-19 நிதியாண்டுக்கான மின் கட்டண நிர்ணயம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இக்கூட்டம் கோவா மாநிலம் மற்றும் யூனியன் பிரதேங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் எம்.கே.கோயல் தலைமை தாங்கினார். ஆணைய உறுப்பினர் நீரஜாமாத்தூர், புதுச்சேரி மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான ரவி மற்றும் மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், இணை மின்சார ஒழுங்குமுறை அதிகாரிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், கட்சியினர், தொழிற்சாலை பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மின்துறை தலைவர் ரவி 2018-19 நிதி ஆண்டுக்கான நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டண விண்ணப்பத்தை அளித்து மின் கட்டணம் உயர்த்துவற்கான அனுமதி கோரினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கருத்துக் கேட்பு நடைபெற்றது. அப்போது, புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பொதுச் செயலாளர் முருகானந்தம் பேசும்போது, ஆண்டுதோறும் மின் கட்டணம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. மின் கட்டணம் உயர்த்தக் கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மின்துறையில் உள்ள நிர்வாக சீர்கேட்டை களைந்து மின் திருட்டு, மின் இழப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறம், கிராமப்புறங்களுக்கு ஒரே மின்கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது. நகரப்பகுதியில் புதைவழி மின் விநியோகம் வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் கம்பி வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் இருப்போர் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஒரே மின் கட்டணம் நிர்ணயம் செய்யக்கூடாது. மேலும் மின் கட்டணத்தையும் உயர்த்தக்கூடாது என்றார்.

பாலா பேசும்போது, ''அரசுத் துறையில் 1.76 கோடி மின்கட்டண பாக்கி உள்ளது. அதனை வசூலிக்கவில்லை. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் யார் மின் கட்டண பாக்கி வைத்திருந்தாலும் அவர்களின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். ஆனால் இங்கு மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதும் இல்லை. மின் பாக்கியும் வசூலிக்கப்படுவதும் இல்லை. அதோடு 90 சதவீத தொழிற்சாலைகள் புதுச்சேரியை விட்டு வெளியேறி விட்டன. எனவே, எதற்கும் மின் கட்டணம் உயர்த்தக் கூடாது'' என்றார்.

தொடர்ந்து சுந்தர்ராஜ் என்பவர் பேசும்போது, ''எப்படியாக இருந்தாலும் மின்கட்டணத்தை உயர்த்தத்தான் போகிறீர்கள். 50 மீட்டர்கள் இருக்கும் ஒரு இடத்தில் 40 மீட்டர்கள் பழுதடைந்து விடுகிறது. ஆனால் பழுதடைந்த மீட்டர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பழுதானாலும் ஒரு கட்டணத்தை நிர்ணயம் செய்துவிட்டு அதையே வசூலிக்கும் நிலை தான் உள்ளது. இது மின்துறை ஊழியர்களுக்கும் நன்கு தெரியும். எனவே மின் மீட்டர்களை சரி செய்ய வேண்டும். மின் கட்டணத்தையும் உயர்த்தக்கூடாது'' என்றார்.

தொடர்ந்து மற்றொருவர் பேசிக்கொண்டு இருந்தபோது, புதுச்சேரி தலித் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென கருத்துக் கேட்பு கூட்ட அரங்கிற்குள் நுழைந்து ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் முன்னிலையில் திரண்டனர். அங்கு மின்கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

அதற்கு ஆணையத் தலைவர் பொதுமக்கள் கருத்துக் கேட்புதான் நடைபெறுகிறது. மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றார். ஆனால் அதனையும் மீறி அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. இதையடுத்து மண்டபத்தின் வெளியே பாதுகாப்பில் இருந்த போலீஸார் உடனடியாக உள்ளே வந்து பிரச்சினையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேற்றினர்.

இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மண்டபத்தின் வெளியே வந்து மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என கோஷமிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x