Published : 18 Sep 2023 06:05 AM
Last Updated : 18 Sep 2023 06:05 AM
வேலூர்: இந்தியாவை காக்க இண்டியா கூட்டணி வெற்றிபெறுவது நமது அரசியல் கடமை என்று திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கந்தனேரி பகுதியில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களில் கட்சி பணியை சிறப்பாக செய்த தலா ஒருவருக்கு நற்சான்று மற்றும் பண முடிப்பை வழங்கினார். தொடர்ந்து திமுக சார்பில் பெரியார் விருது கி.சத்தியசீலன், அண்ணா விருது க.சுந்தரம், கலைஞர் விருது ஐ.பெரியசாமி, பாவேந்தர் பாரதிதாசன் விருது மலிகா கதிரவன், பேராசிரியர் விருது ந.ராமசாமி ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: 1949-ல் திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டு காலம் ஆகிறது. 1967-ல் முதன் முதலாக ஆட்சிக்கு வந்தோம். 6 முறை வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்றி வருகிறோம்.
தமிழ்நாடு, தமிழர்களின் வளர்ச்சி பலருக்கு பொறாமையாக இருக்கிறது. தமிழ்நாட்டின் மாநில உரிமையை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.
புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் நமது மாநில கல்வி வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள். ஒன்றிய அரசு கூறிய கல்வி வளர்ச்சியை தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை நீட் தேர்வு மூலம் சிதைக்கிறார்கள். அனிதா முதல் ஜெகதீசன் வரை ஏராளமானவர்கள் நீட்டால் தற்கொலை செய்துகொண்டார்கள். இப்போது, வடமாநிலத்திலும் தற்கொலைகள் தொடர்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வால் 22 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் பாஜக அரசுதான். இரக்கமற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. பிரதமரைப் பார்த்து புதிதாக எந்த வாக்குறுதியையும் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்றால் இல்லை. உதாரணமாக 2015-ல் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிவிட்டு இந்தாண்டுதான் டெண்டர் விட்டிருக்கிறார்கள்.
9 ஆண்டுகளாக என்ன சாதனை என்று பார்த்தால், 2014-ல் 420 ரூபாயாக இருந்த சிலிண்டர் இப்போது 1,100-ஆக உயர்த்தியதுதான் சாதனை. தேர்தல் வருகிறது என்பதற்காக கண் துடைப்புக்காக 200 ரூபாய் குறைத்துள்ளார்கள். மோடி ஆட்சிக்கு வந்தபோது 2014-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ஆக இருந்தது. இப்போது, 3 மடங்கு வரி உயர்ந்து 102-ஆக உள்ளது. டீசல் 55 ரூபாயில் இருந்து இப்போது 94-ஆக 7 மடங்கு வரி உயர்த்தியுள்ளனர்.
இப்போது, சிஏஜி அறிக்கையில் 7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கி இருப்பது சிபிஐ அதிகாரிகள்தான். இந்த ஊழல் முகத்தை மறைக்க பார்க்கிறார்கள். மக்களிடம் பாஜகவின் ஊழல் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதுதான் நமக்கு இருக்கும் முக்கிய கடமை. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதியில் நாம் வெற்றி பெறப்போகிறோம்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும். நமது ஆட்சி மத்தியில் அமைந்தால் சமூக நீதியை நம்மால் உருவாக்கித்தர முடியும். இந்தியாவை காக்க இண்டியா கூட்டணி வெற்றிபெறுவது நமது அரசியல் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT