

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பழங்கள், பூக்கள், பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கான பூஜைப் பொருட்கள் வாங்க மக்கள் நேற்று கோயம்பேடு சந்தையில் குவிந்தனர்.
கோயம்பேடு சந்தையில் நேற்றுபூக்கள் விலை குறைவாக இருந்தது. ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.50-100, மல்லி ரூ.900, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.450, கனகாம்பரம் ரூ.600-700, பன்னீர் ரோஜா ரூ.600-700, சாக்லேட் ரோஜா ரூ.160,சம்பங்கி ரூ.150-180 என விற்பனையானதாக கோயம்பேடு பூக்கள் மொத்த வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் மூக்கையா கூறினார். கரும்பு ஒரு கட்டு ரூ.500, ஒரு கம்பு கதிர் ரூ.5, சோளக்கட்டு (80) ரூ.400-500 என விற்பனையானது.
ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.25-35,மோரிஸ் வாழைப்பழம் ரூ.20-22, பூவன் வாழை ரூ.28, செவ்வாழை ரூ.40, நேந்திரம்பழம் ரூ.45, பேரிக்காய் கொடைக்கானல் ரகம் ரூ.20-30, டெல்லி ரகம் ரூ.45-50, ஆப்பிள் ரூ.120-230, விஜயவாடா ரக கொய்யா 15 கிலோ பெட்டி ரூ.250, மாலூர் ரகம் ரூ.500, விளாம்பழம் 50 கிலோ மூட்டை ரூ.2,500 என விற்பனையானதாக கோயம்பேடு பப்பாளி வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் எம்.ஜனார்த்தனன் குமார் கூறினார்.
கோயம்பேடு சந்தையில்காய்கள் விலையும் குறைவாகவே இருந்தது. அருகம்புல், எருக்கம்பூ மாலை, தோரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திரண்டதால் கோயம்பேடு சந்தை பகுதியில் கூட்டம் அலைமோதியது. சந்தை அருகே மெட்ரோ பணி நடப்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், காய்கறி ஏற்றி வந்த லாரிகள் சந்தைக்குள் வருவதற்கு சிரமப்பட்டன.
பொதுமக்களும் எளிதாக சந்தைக்குள் வந்து செல்ல முடியவில்லை. தவிர, பரவலாக பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மழை பெய்தது. இதனால், எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.