

தாம்பரம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் உள்ள வீரராகவன் ஏரியை சீரமைக்க ரூ.25 லட்சத்தை தாம்பரம் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.
குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் உள்ள வீரராகவன் ஏரி 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் தற்போது இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. தாம்பரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் எந்த புனரமைப்பு பணிகளும் நடைபெறாமல் ஏரி மாசடைந்து வந்தது.
பல்லாவரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டாலும் இந்த ஏரியை சுற்றி கழிவுநீர் ஏரியில் கலப்பது இன்னும் தடைபடவில்லை. ஏரியை சுற்றியுள்ள லட்சுமிபுரம், நியூ காலனி, கக்கிளஞ்சாவடி என ஏரியின் அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
மற்றொருபுறம் ஏரியை சுற்றியுள்ள லட்சுமிபுரம், துர்கா நகர், நியூ காலனி பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் பல ஆண்டுகளாக கலந்து வருவதால் ஏரி கடுமையாக மாசு அடைந்துள்ளது. இப்பகுதியை கடந்து சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. ஆக்கிரமிப்புகளால் ஏரி சுருங்கி, கழிவுநீர் குட்டையாக மாறி வருவதுடன், ஆகாயத் தாமரை செடிகளால் ஏரி அழிந்து வரும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஏரியை மீட்டெடுக்கக் கோரி குரோம்பேட்டையைச் சேர்ந்த சாலமன் ராஜா என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, கே.சத்யகோபால் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
துர்கா நகர், செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் கலப்பதில்லை என்பதை தாம்பரம் மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். கழிவுநீரால் மாசடைந்திருக்கும் ஏரியில் உள்ள செடிகளை நீர்வளத் துறை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அகற்ற வேண்டும்.
ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி, சம்பந்தப்பட்டவர்களை மறுகுடியமர்வு மற்றும் ஏரியை மாசுபாடில்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையை வருவாய் கோட்டாட்சியர், காவல் துறை, மாநகராட்சி, மின்வாரியம் உள்ளிட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகளை 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தாம்பரம் மாநகராட்சி சார்பில் ஏரியை புனமரைக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, நீர்வள ஆதாரத் துறை, காவல் துறை, மின்வாரியம் ஆகியோருடன் கலந்தாய்வு செய்து தீர்ப்பாயத்தின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும். மேலும் விரைவில் புனரமைப்புக்கான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.