Published : 18 Sep 2023 09:39 AM
Last Updated : 18 Sep 2023 09:39 AM
சென்னை: சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் நடைபெறும் அராஜகத்தை தடுத்த நிறுத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
`பேசு தமிழா பேசு' என்று யுடியூப் சேனல் சார்பில் "சனாதன தமிழர் சங்கமம் 2023” நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. "நான் ஏன் சனாதன தர்மத்தை ஆதரிக்கிறேன்" என்ற தலைப்பில் இந்து சமய அறிஞர்கள், சான்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர்.
இதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது: சனாதனம் என்பது தர்மம். இந்த தர்மத்தின் சின்னம் சிவபெருமான். ஈவெரா பிறப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே, பெண் கல்வி நிலைநாட்டப்பட்டது. உடன்கட்டை ஏறுதல் ராஜாராம் மோகன்ராய் என்ற சீர்திருத்தவாதியால் தடைசெய்யப்பட்டது.
ஆனால், அனைத்து சீர்திருத்தங்களுக்கும் காரணம் ஈவெராதான் என்று கூறுகின்றனர். அரசின் துணையுடன் நமது தர்மத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் நடைபெறும் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசும்போது, "இது நாகரிகங்களுக்கும், மதத்துக்கும் நடைபெறும் சண்டை. இந்து என்பது மதம் அல்ல. அது ஒரு நாகரிகம். மெசபடோமியா, சுமேரியா, கிரேக்கம் என உலகில் ஆதிநாகரிகங்கள் மறுபிறவி தத்துவத்தையும், பல வழிபாடுகளையும் ஏற்றுக்கொண்டிருந்தன. அனைத்து நாகரிகமும் தற்போது இல்லை. பண்டைய நாகரிகமான பாரதம் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளது.
உலகில் பல நாகரிகங்கள் மதங்களால் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்திய நாகரிகத்தை அழிக்க மதமாற்ற மாஃபியாக்கள் முயல்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்து தர்மம் குறித்து கற்றுத்தர வேண்டும்" என்றார்.
பாஜக மாநில விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பேசும்போது, "சனாதன தர்மம் என்றால் என்ன என்று, எதிர்ப்பாளர்களுக்கு எல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. இது எனது தர்மம். நம்பாதவர்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்? பழையதில் பழையது, புதியதில் புதியது என்பதுதான் சனாதன தர்மம். மனிதர்கள் வாழ்வதற்கான தர்மம்தான் சனாதன தர்மம்" என்றார்.
ஆன்மிகச் சொற்பொழிவாளர் துஷ்யந்த் தர் பேசும்போது, "தர்மத்துக்கு சோதனை வரும்போது, அதைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். அப்போது அந்த தர்மம் நம்மைக் காக்கும். சனாதன தர்மத்தில் கேள்விக்கு இடமுண்டு. ஆனால், கேள்வி நல்ல நோக்கத்துடன் இருக்க வேண்டும். பதிலைத் தெரிந்து கொள்வதற்காக கேள்வி வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சி சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். இதில் பேசிய பலரும், சனாதன தர்மம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில், பார்வர்ட் ப்ளாக் கட்சித் தலைவர் திருமாறன், தடா பெரியசாமி, திரைப்பட இயக்குநர் பேரரசு, பாஜக மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவர் டெய்சி, டி.ஏ.ஜோசப் உள்ளிட்டோர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT