Published : 05 Dec 2017 05:29 PM
Last Updated : 05 Dec 2017 05:29 PM

பத்திரிகையாளரைத் தாக்கிய வழக்கு; விஜயகாந்துக்கு ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பித்தது ஆலந்தூர் நீதிமன்றம்

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

விஜயகாந்த் 2011-ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலில் 29 இடங்களை வென்றார். பின்னர் சிலமாதங்களிலேயே அதிமுகவுடன் மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயகாந்த் தனக்கு அரசு வழங்கிய காரையும் திருப்பிக் கொடுத்தார்.

அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமாக நடந்துகொண்டார். அதன் பின்னர் மதுரை செல்வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம் கேள்வி கேட்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பாலுவிடம் மோதலில் ஈடுபட்டு வாக்குவாதம் ஆனது. இதில் அவர் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது சம்பந்தமான வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடிந்து போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். எதிர்தரப்பான குற்றம்சாட்டப்பட்ட விஜயகாந்துக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்க விஜயகாந்தை நேரில் ஆஜராக ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பலமுறை ஆஜராகாத விஜயகாந்துக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

கடைசியாக கடந்த நவம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது உடல் நலத்தைக் காரணம் காட்டி விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் கட்டாயம் டிச.5 அன்று ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. கடந்த வாரம் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச்  சென்றார்.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருப்பதால் அவரால் இன்று ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார். ஆனால், குற்றப்பத்திரிகையை நேரில் ஆஜராகி பெற வேண்டும் என்று தெரிவித்தும் ஆஜராகாமல் தவிர்த்ததை சுட்டிக்காட்டி அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆலந்தூர் நீதிமன்றம், விஜயகாந்த் மீது ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்டை பிறப்பித்து வழக்கை அடுத்த ஆண்டு பிப்.13-க்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x