Published : 17 Sep 2023 05:09 AM
Last Updated : 17 Sep 2023 05:09 AM

எதிர்க்கட்சி தொகுதியில் பாரபட்சம் காட்டினால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஆர்.பி.உதயகுமார்

மதுரை

எதிர்க்கட்சி தொகுதிகளில் பாரபட்சம் காட்டினால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா பேரவை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சவுராஷ்டிரா கிளப்பில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன் தலைமை வகித்தார். நல திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது தேர்தல் வந்துவிட்டது. தற்போது அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டனர். அதேபோல் திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. தற்போது இதுவும் முடக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய இடம் ஒதுக்கப்பட்டதையும் முடக்கியுள்ளனர்.

செக்கானூரணி பகுதியில் இறந்தவர்களை பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்து வந்தனர். மக்களின் எதிர்ப்பை மீறி மின் மயானத்தை கொண்டு வந்துள்ளனர். முதியோர் உதவித்தொகையை எங்களால் பெற்றுத் தர முடியவில்லை. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மக்களுக்கு சரியாக பணி ஒதுக்கவில்லை.

தொடர்ந்து எதிர்க்கட்சி தொகுதிகளில் அரசு திட்டப் பணிககளை நிறைவேற்றுவதில் பாராமுகம் காட்டப்பட்டால் எம்எல்ஏ பதவியிலிருந்து விலக தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x