Published : 17 Sep 2023 05:15 AM
Last Updated : 17 Sep 2023 05:15 AM

நிலவில் மனிதன் குடியேற வாய்ப்பு: விஞ்ஞானி நாராயணன் நம்பிக்கை

நிலவில் மனிதன் குடியேற வாய்ப்புள்ளதாக நம்புவதாக விஞ்ஞானி வி.நாராயணன் தெரிவித்தார்.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் கல்லூரி நிறுவனர் தின விழாவில் பங்கேற்க வந்த திருவனந்தபுரம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன திரவ இயக்க திட்ட மைய இயக்குநர் வி.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிலவில் தரையில் 60 டிகிரி செ.கி. வெப்பம் உள்ளது. நிலவில் உள்ள பிளாஸ்மாவில் 50 முதல் 300 லட்சம் எலக்ட்ரான் ஒரு மீட்டர் க்யூப் வால்யூம்க்குள் இருக்கிறது என்பதையும், நிலவில் 6 இடங்களில் அதிர்வு இருக்கிறது என்பதையும், குரோமியம், சிலிக்கான், சல்பர், டைட்டானியம் உள்ளிட்ட 8 தாது பொருட்கள் இருப்பதையும் ரோவர் மூலம் கண்டறிந்துள்ளோம்.

சந்திரயான் - 3 திட்டம் என்பது 100 சதவீதம் வெற்றிகரமான திட்டமாகும். இந்த திட்டம் இந்தியர்களை ஒருமைப்படுத்திய ஒரு திட்டம். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். அதற்கு இது தான் முதல் படி. நிலவில் மனிதர்கள் குடியேற வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்தியா எல்-1 என்ற செயற்கோளை அனுப்பி உள்ளோம். இந்த செயற்கோள் 1,480 கிலோ எடை கொண்டது. இதில், 7 விஞ்ஞான கருவிகள் உள்ளன. கடந்த 2-ம் தேதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, ஒரு லட்சத்து 22 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு இந்த செயற்கைகோளை கொண்டு சென்றுள்ளோம். வரும் 19-ம் தேதி காலையில் அங்கிருந்து சூரியனை நோக்கி அனுப்ப உள்ளோம்.

அடுத்த மாதம் ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தொடங்கஉள்ளது என்றார். கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல், முதல்வர் காளிதாஸ முருகவேல் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x