உடுமலையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பலருக்கும் நிதி வரவில்லை என புகார்

உடுமலையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பலருக்கும் நிதி வரவில்லை என புகார்
Updated on
1 min read

உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரத்தில் பலருக்கு அரசின் மகளிர் உரிமை தொகை முறையாக வங்கி கணக்கில் வரவு ஆகவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகைக்காக, உடுமலை சுற்று வட்டாரத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், அறிவித்தபடி ரூ.1000 வங்கி கணக்கில் வந்துள்ளதாக பயனடைந்த பெண்கள் பலர் தெரிவித்தனர். ஆனால், உடுமலை நகரம், ஒன்றிய பகுதிகளிலுள்ள பலர் தங்களுக்கு தொகை வரவில்லை என புகார் தெரிவித்தனர்.

இதனால், உடுமலை தலைமை தபால் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களிலுள்ள ஆதார் சேவை மையங்களில் கூடிய பெண்கள், தங்கள் வங்கி கணக்கு மற்றும் செல்பேசி எண்கள் உள்ளிட்டவை முறையாக விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொண்டனர். இதில் முறையீடுகள் மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியதால், அதற்காகவும் பெண்கள் ஆதார் மையங்களை அணுகி புகார்களை பதிவு செய்தனர்.

இது குறித்து உடுமலை, இந்திரா நகர், குரல் குட்டை, போடிபட்டி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, "அரசு அறிவித்தபடி உரிய முறையில், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளோம். ஆனாலும், பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. இது குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி, விடுபட்டவர்களுக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

வருவாய் துறையினர் கூறும்போது, "உடுமலை, மடத்துக் குளம் வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணிகளை மட்டுமே வருவாய் துறையினர் மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகமே நேரடியாக அவற்றை சேகரித்து பயனாளிகளை தேர்வை செய்துள்ளது. இதில் விண்ணப்பித்தும் விடுபட்டவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே புகாரை பதிவு செய்து முறையிட வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in