ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு; ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு

ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு; ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த நவம்பர் 30-ம் தேதி ஒக்கி புயல் தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி அம்மாவட்டத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் போராட்டம் ஒருபுறம், அரசியல் கட்சிகளின் விமர்சனம் மறுபுறம் என அரசுக்கு பல தரப்பிலிருந்து நெருக்கடி எழுந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார். கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டார்.

பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தில் தூத்தூரில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது: ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை அளிக்கப்படும்.

குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

புயலால் சேதமடைந்த படகுகளை மதிப்பீடு செய்து அதற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும்வரை தேடும் பணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in