Published : 17 Sep 2023 04:00 AM
Last Updated : 17 Sep 2023 04:00 AM

சென்னை, புறநகரில் இடி, மின்னலுடன் கனமழை

சென்னையில் நேற்று மதியம் திடீரென இருள் சூழ்ந்து மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேங்கிய மழை நீரில் சீறியபடி சென்ற கார். படம்: பிரபு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இல்லாத நிலை நீடித்து வருகிறது. தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை4 மணி அளவில் மாநகரப் பகுதியில் வானம் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. மாநகரம் முழுவதும் இரவு போல இருள் சூழ்ந்து காட்சியளித்தது. வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் முகப்பு விளக்கைஎரியவிட்டபடி சென்றன. இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் மாநகர் மற்றும் புறநகரில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை, பின்னர் கனமழையாக கொட்டியது.

மாநகரில் குறிப்பாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, புரசைவாக்கம், புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

புறநகர் பகுதிகளான தாம்பரம், மேடவாக்கம், துரைப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. திடீர் கனமழையால், நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். அதேபோல் மெரினாவுக்கு பொழுதைக் கழிக்க வந்தவர்களும் கனமழையில் நனைந்து சிரமத்துக்குள்ளாயினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x