

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹோமி யோபதி மாணவி உட்பட 6 பேர், டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில், ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவின் பேரில் டெங்கு கொசுப் புழு ஆதாரங்களைக் கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹோமி யோபதி மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது நேற்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. இவர்களில் 6 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், காய்ச்சல் பாதிப்புடன் 20 பேர் உள் நோயாளியாக இங்கு சிகிச்சையில் உள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து, காய்ச்சலால் நேற்று முன்தினம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.