Published : 17 Sep 2023 04:06 AM
Last Updated : 17 Sep 2023 04:06 AM
நாகர்கோவில்: மீன் பிடிக்க ஆழ் கடலுக்கு சென்ற போது விசைப் படகு மீது கப்பல் மோதியதால் மாலத் தீவில் தவித்த குமரி மீனவர்கள் 7 பேர் உட்பட 12 மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர். குமரி மீனவர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டித் தழுவி வரவேற்றனர்.
குமரி மாவட்டம் தூத்துரை சேர்ந்த பைஜு என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் பகுதியைசேர்ந்த 2 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த ஒருவர் என 12 மீனவர்கள் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து மாலத் தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்களின் விசைப் படகு மீது மோதியதில் விசைப் படகு ஆழ்கடல் பகுதியில் மூழ்கியது. 12 மீனவர்களும் நடுக் கடலில் தத்தளித்த நிலையில் விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் 12 மீனவர்களையும் மீட்டு மாலத்தீவுக்கு கொண்டு வந்து கரைசேர்த்தது.
மாலத்தீவு அதிகாரிகள்12 மீனவர்களையும் விசாரணை கைதிகளாக அங்கு வைத்திருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாலத் தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்று 12 மீனவர்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.
பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து 12 மீனவர்களும் விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து மும்பைக்கு வந்து அங்கிருந்து இரவு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
தங்களது வீடுகளுக்கு நேற்று வந்து சேர்ந்த மீனவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், அரசுக்கும் மீனவர்களின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT