மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டோரின் குறை தீர்க்க உதவி மையங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டோரின் குறை தீர்க்க உதவி மையங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Published on

மதுரை: “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏதேனும் காரணத்தால் விடுபட்டவர்களின் குறைகளைத் தீர்க்க தாலுகா அளவில் உதவி மையங்களை உருவாக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மதுரையில் இன்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உண்மையான தேவை உடையவர்கள் யாராக இருந்தாலும் விடுபட்டு விடக்கூடாது என்பதே தமிழக முதல்வரின் நோக்கம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு. மகளிர் உரிமைத் தொகை பெற முழு தகுதியிருந்தும் ஏதோவொரு காரணத்தால் விடுபட்டிருந்தால் அவர்களது குறைகளை தீர்ப்பதற்கு ஒரு அமைப்பு முறையை உருவாக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பிக்காதவர்கள், விடுபட்டவர்கள் உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படும். இத்திட்டத்தில் ஏழைகள் யாரும் தவிர்க்கப்படவில்லை. யாருக்கெல்லாம் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in