

வேலூர்: வேலூரில் ஏழை மக்களுக்காகவே இயங்கிய 3-ஏ அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில் அந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா ஊரடங்கால் போக்குவரத்து முடங்கிய நிலையில் பொதுமக்களின் வாழ்க்கையையும் வீட்டுக்குஉள்ளேயே முடக்கியது. பொதுமக்களின் பொது சேவையாக இருந்தஅரசுப் பேருந்துகள் ஊரடங்கால் முடங்கியது. ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் படிப்படியாக பேருந்து சேவை தொடங்கியது.
அதன்படி, வேலூர் மண்டல அரசுபோக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கிராமப்புற மக்கள் பயன்பாட்டுக்கான போக்குவரத்து சேவையை பல இடங்களில் மீண்டும் தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் நீண்ட போராட்டத்துக்கு பிறகே பேருந்து சேவையை தொடங்கி வருகின்றனர்.
அந்த வகையில், வேலூரில் ஏழை மக்களுக்காக இயங்கி வந்த 3-ஏ பேருந்து சேவை கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. பின்னர், ஊரடங்கு தளர்ந்ததும் பேருந்து சேவை தொடங்கப் படாமலேயே உள்ளது. ஏதோ ஒருகாரணம் கூற வேண்டும் என்பதற்காக நஷ்டத்தில் இயங்குகிறது என சுருக்கமாக அதிகாரிகள் தரப்பில் கூறிவருகின்றனர். ஏழை மக்களுக்காகவே இயங்கிய 3-ஏ பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கூறும்போது, ‘‘சேண்பாக்கம் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏழ்மையான நிலையில் கூலி வேலைக்கு செல்பவர்கள். 3-ஏ பேருந்து சேவை சேண்பாக்கத்தில் இருந்து பாகாயம், அங்கிருந்து வேலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் சேண்பாக்கம் வரும். சேண்பாக்கத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு ஓல்டு டவுன், குட்டைமேடு வழியாக பாகாயம் வரை இயக்கப்படும்.
அங்கிருந்து மீண்டும் வேலூர் வரும் பேருந்து செங்காநத்தம் சென்று வேலூர் திரும்பும். பின்னர், வேலூரில் இருந்து விரிஞ்சிபுரம் சென்று மீண்டும் வேலூர் வந்ததும், அங்கிருந்து சேண்பாக்கம் வரை இயக்கப்படும். மீண்டும் சேண்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செங்காநத்தம் வரை இயக்கப்படும் பேருந்து இரவு 9 மணிக்கு வேலூர் பழைய பேருந்து நிலையத்துடன் ஒரு நாள் சேவை முடிவுக்கு வரும்.
இந்த 3-ஏ பேருந்து சேவை முழுக்க, முழுக்க ஏழை மக்களுக்காகவே இயக்கப்பட்டது. எப்போதும், பேருந்தில் கூட்டம் இருக்கும். 7 ரூபாயில் சேண்பாக்கத்தில் இருந்து வேலூர் சென்றவர்கள் இன்று 50 ரூபாய் ஆட்டோவுக்காக கொடுக்க வேண்டியுள்ளது. வேலூர் மார்க்கெட்டில் வேலை செய்பவர்கள், மெக்கானிக் வேலைக்கு செல்பவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்களுக்கு 3-ஏ பேருந்து தான் வரப்பிரசாதமாக இருந்தது.
கரோனா காலத்தில் பேருந்தை நிறுத்தியவர்கள் இப்போது மீண்டும் இயக்காமல் மறந்துவிட்டனர். மீண்டும் 3-ஏ பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று அரசு போக்கு வரத்துக்கழக அதிகாரிகளுக்கு நாங்கள் நினைவூட்டுகிறோம்’’ என்றனர். இதுகுறித்து, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தால் பரிசீலனை செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.