கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணியாற்றியோருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.
இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவன பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்!
களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா, அண்ணா பிறந்தநாளான நேற்று, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், 13 பெண்களுக்கு வங்கி ஏடிஎம்அட்டைகளை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.
