ஆவின் நெய் விலை உயர்வை வாபஸ் பெற அதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள்கூட இல்லாத நிலையில், இனிப்பு வகைகள் தயாரிக்கப் பயன்படும் நெய் மற்றும் வெண்ணெய் விலைகளை பலமடங்கு உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலையேற்றம், இனிப்பு வகை விலை உயர்வில் நிச்சயம் எதிரொலிக்கும்.
எனவே, மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, உடனடியாக பால் மற்றும் பால் பொருட்களின் விலை ஏற்றத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீமான் கண்டனம்: இதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆவின் பொருட்களின் விலையை அரசு மீண்டும் மீண்டும் உயர்த்துவது நியாயமற்ற செயலாகும். எனவே, ஆவின் நெய் விலை உயர்வை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
