

சென்னை: மணல் குவாரி அதிபர்களின் வீடுகளில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையில் ரூ.15.71 கோடி மதிப்பிலான ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில்ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அமலாக்கத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 12-ம் தேதி சோதனை நடத்தியது.
குறிப்பாக, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கரிகாலன், ஆடிட்டர் டி.சண்முகராஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அந்த வகையில் ரூ.12.82 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணக்கில் வராதபணம் ரூ.2.33 கோடி, ரூ.56.86 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.