

திருப்பூர்: திருப்பூர் குமார் நகர் செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாகராஜ் கணேஷ்குமார் (48). இவர் தனது முகநூலில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, அவரது படத்தை பிரசுரித்து சனாதனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட இந்து முன்னணியின் 15 வேலம்பாளையம் நகர செயலாளர் சுரேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், பள்ளியை முற்றுகையிட்டனர்.
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர். அங்கு வந்த 15 வேலம்பாளையம் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக திமுகவினர் சிலர் திரண்டனர்.
வார்த்தைகள் நன்றாக இருந்ததால், மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் கருத்தை முகநூலில் மீள்பதிவு செய்தேன். தற்போது எதிர்ப்பு வந்ததால், அந்த பதிவை நீக்கம் செய்துவிட்டேன் என தலைமை ஆசிரியர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.