

கோவை: திமுக தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மத்திய பாஜக அரசின் ஊழல்களைப் பற்றி பேசி விடக் கூடாது என்பதற்காகவே, சனாதனத்தைப் பற்றி பேசி பாஜக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. எனவே, திமுகவினரும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், பாஜகவின் தந்திரத்துக்கு இடமளித்து விடக்கூடாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கட்சிக்கு மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளுக்கும் அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கிறார்.
கணக்கு தணிக்கைத் துறை தலைவரின் (சிஏஜி) அறிக்கையில் மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு திட்டமிடப்பட்டதைவிட அதிக செலவு செய்யப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதைதான் ஊழல் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஊழல் நடந்திருந்தால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். சனாதனத்தைப் பற்றி பேசி பாஜக திசைதிருப்பவில்லை. திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடைமாற்றவே, திட்டமிட்டு எழுதி வைத்து அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார்.
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கொடுங்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுங்கள். விவசாயக் கடன்களை ரத்து செய்யுங்கள். அதைவிடுத்து எதிர்க்கட்சிகளைப் போல எப்போதும் அரசியல் பேசிக் கொண்டிருந்தால் வரும் தேர்தலில் அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.