

சென்னை: அண்ணா 115-வது பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலினும், சென்னையில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 115-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னதாக, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கும் சென்று, அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர்சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏக்கள் கே.சுந்தர் மற்றும் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் மரியாதை: பிறந்தநாள் விழா காரணமாக, சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக, அலங்கார நிழற்குடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
அங்கு அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், எபிநேசர், செய்தித் துறை செயலர் இரா.செல்வராஜ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதைசெலுத்தினர். பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சி அலுவலகத்தில் மரியாதை செலுத்தினார்.
தலைவர்கள் புகழாரம்: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலின்: அறிவியக்கமாம் திமுகவை தோற்றுவித்து, என்றும் தமிழகத்தை ஆளும் தலைமகன் அண்ணாவின் பிறந்தநாள். தன் அறிவுத் திறத்தால் தமிழினத்தை பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில் கடமை ஆற்ற கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்ற களம் காண்போம். எண்ணித் துணிவோம். இந்தியாவை மீட்கும் வேட்கை தீ பரவட்டும் நாடெங்கும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: ‘இண்டியா’ கூட்டணி மூலம் திராவிடத்தின் தேவைதிக்கெட்டும் உணரப்பட்டு, தேர்தலுக்கு இதுவே சரியான ஆயுதமாகி, வெற்றிக்கனி பறிக்க வேக நடை போடுகிறது. அண்ணா பிறந்தநாளில் மதவெறி, சாதி வெறிக்கு விடைகொடுக்க சூளுரைத்து சுயமரியாதை மீட்போம்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: பேச்சாற்றல், எழுத்தாற்றல், சிந்தனையாற்றல் என்ற 3 பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சி சிந்தனையை தமிழகத்தில் விதைத்த முன்னோடி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற 3 சொற்களை மந்திரம்போல இளைஞர்களின் மனதுக்கு பழக்கியஆசான். தன் கொள்கை பிடிப்பால்இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் அண்ணா பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதில் மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.