Published : 30 Dec 2017 10:39 AM
Last Updated : 30 Dec 2017 10:39 AM

கோவை மத்திய அரசு அச்சகம் ஜன.15-ல் மூடல்: நாசிக் அச்சகத்தில் பணியில் சேர ஊழியர்களுக்கு உத்தரவு

பல்வேறு எதிர்ப்புகளையும், அரசியல் அழுத்தங்களையும் மீறி கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை 15-ம் தேதியுடன் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழியர்கள் உடனடியாக நாசிக் அச்சகத்தில் பணியில் சேரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியில் மத்திய அரசின் அச்சகம் கொண்டு வரப்பட்டது. 134 ஏக்கர் பரப்பளவில், பல துறைகளின் அச்சுப் பணிகளை செய்து கொடுத்து லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். மேம்படுத்தப்படும் என எதிர்பார்த்த சமயத்தில் திடீரென இந்த அச்சகத்தை மூடப்போவதாக மத்திய அமைச்சரவை அறிவித்தது. மொத்தம் உள்ள 17 அச்சகங்களில் 12 அச்சகங்களை மூடிவிட்டு, அவற்றின் பணிகளை மீதமுள்ளவற்றில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. மூடப்படும் அச்சகங்கள் பட்டியலில் கோவையும் இடம்பெற்றது. ஆனால் கோவை அச்சகத்தை மூடக்கூடாது என கோரிக்கை வலுத்தது. தமிழக முதல்வர் கே.பழனிசாமியும் இதுகுறித்து பிரதமருக்கு கோரிக்கை கடிதம் எழுதினார்.

தொடர் வலியுறுத்தல், பணிநலனை முன்வைத்து தொழிலாளர்கள் மத்திய தீர்ப்பாயத்தை அணுகியது போன்ற காரணங்களால் டிச.31-ம் தேதியோடு பணிகளை முடிக்க வேண்டுமென வெளியிடப்பட்டிருந்த உத்தரவு தற்காலிகமாக தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய தீர்ப்பாயத்தின் விசாரணையை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராதவகையில் திடீரென கோவை அச்சகத்தை ஜன.15-ம் தேதியுடன் மூட மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள அச்சகத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அச்சுப் பணிகளை நிறுத்துவதுடன், 36 ஊழியர்கள் ஜன.16-ம் தேதி நாசிக் அச்சகத்தில் பணிக்குச் சேர வேண்டுமெனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 21 பேர் ஜன.31-ம் தேதியும், மீதமுள்ளவர்கள் அடுத்த உத்தரவு வரும்போது அங்கு பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீர்ப்பாய தீர்ப்பை நோக்கி

தொழிலாளர்கள் கூறும்போது, ‘ஜன.16-ம் தேதி நாசிக்கில் ஊழியர்கள் பணியை தொடர வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளதால், கோவை அச்சகம் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. அச்சகம் மூடப்பட்டால் எங்களின் பணி நலன்கள் பாதிக்கும்.

மத்திய அரசு நிறுவனம் இடம் பெயர்வது தமிழகத்துக்கே பெருமை இழப்பாகும். 134 ஏக்கர் நிலமும் வேறு பயன்பாட்டுக்குச் சென்றுவிடும். மத்திய தீர்ப்பாயத்தில் ஜன.1-ம் தேதி வெளிவரும் தீர்ப்பு மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளது. மற்றபடி தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பாவிட்டால் கோவை அச்சகத்தை காப்பாற்ற முடியாது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x