

செங்கல்பட்டு: முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் உள்ளஅவரது சிலைக்கு நேற்று வி.கே.சசிகலாமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளுக்கு சென்று அவரது ஆதரவாளர்களுடன் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தமிழகத்தில் குற்றங்களை அதிகமாக செய்வது திமுகவினர்தான். தமிழகம் தற்போது, ரூ.7 லட்சத்து 53-ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இந்தியாவில் அதிக கடன்வாங்கியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.
திமுக ஆட்சிக்குவந்து 28 மாதங்கள் ஆகிறது. அதற்குள் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடனை ஏற்படுத்திஉள்ளனர். தேர்தல் வாக்குறுதிப்படி எதையும்செய்யவில்லை. மகளிர் உரிமை தொகையைஅறிவித்தபடி அனைவருக்கும் வழங்கவில்லை. மக்களுக்கு கொடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால் கடன் சுமையை ஏற்றிகொண்டே சென்றால் வருங்கால சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்றார்.
இதனிடையே திருக்கழுகுன்றம் பகுதியில் சசிகலாவை வரவேற்று அதிமுக சின்னம் மற்றும் கொடி பயன்படுத்தப்பட்டிருந்தது. தடையை மீறி பயன்படுத்தியதாகக் கூறி அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் சசிகலா மீது போலீஸில் புகார் அளித்தனர்.