

சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பாக நடந்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் அளித்த மாணவி தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மாணவி காணொலி காட்சி மூலமாக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, சிவசங்கர் பாபா மிகவும் செல்வாக்குமிக்க நபர் என்பதால் நேரில் வந்து அவருக்கு எதிராக தன்னால் வாக்குமூலம் அளிக்க முடியாது என்றும், ஆனால் காணொலி காட்சி வாயிலாக எப்போது வேண்டுமென்றாலும் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதையேற்ற நீதிபதி, அந்த பெண் தனது வாக்குமூலத்தை காணொலி காட்சி மூலமாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அளிக்க சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.