

சென்னை: மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்ய ஏதுவாக, தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாதம்தோறும் முதல் மற்றும் 3-வது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மகளிர் திட்ட இயற்கை சந்தை நடத்தப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்படும் இந்த சந்தையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரித்த இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்படும்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு இயற்கை சந்தை இன்றும்,நாளையும் (செப்.16, 17) நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இச்சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய பொருட்கள், வெல்லம், கருப்பட்டி, பழங்கள், காய்கறிகள், பனைஓலை பொருட்கள், தின்பண்டங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.
2 நாட்கள் நடைபெறும் இயற்கை சந்தையை பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பார்வையிட்டு, விரும்பிய பொருட்களை வாங்கி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.