

சென்னை: சென்னை எம்எம்டிஏ காலனியில் கடந்த மாதம் மாடு முட்டியதில் பள்ளி சிறுமி ஒருவர் காயமடைந்தார். அப்போது மாநகராட்சி சார்பில் மாட்டின் உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கடந்த வாரம் பழவந்தாங்கல், பி.வி.நகர், 2-வது குறுக்கு தெருவில் வசித்து வரும் கண்ணன் (51) என்ற தொழிலாளியை மாடு முட்டியதில் வயிறு கிழிந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் அந்த மாட்டை மயக்க ஊசி செலுத்தி மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச் சென்று புளூ கிராஸில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் மாடு ஒன்று சாலையில் சென்றவர்களை முட்டித் தள்ளியது. இதில் காவலர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். அந்த மாடுவாகனங்களையும் முட்டி சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் 4 மாடுகளைநேற்று பிடித்தனர். மக்களை முட்டிகாயப்படுத்திய மாட்டின் உரிமையாளர் தேவராஜ் மீதும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.