

சென்னை: சென்னை செம்மஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், அடுத்தவருக்குச் சொந்தமான வீட்டை குத்தகைக்குவிடுவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து, இரு பெண்களிடம் ரூ.4லட்சம் மோசடி செய்ததாக திரிவானா என்ற சவுந்தர்ய லட்சுமி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரரும், அவரது கணவர்லட்சுமி நரசிம்மனும் அந்த வீட்டைவாடகைக்கு எடுப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு முன்தொகையோ அல்லது வாடகை ஒப்பந்தமோ போடவில்லை. இந்நிலையில், அந்த வீட்டுக்கு தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று கூறி, வீட்டை குத்தகைக்கு விடுவதாக இரு பெண்களிடம் தலா ரூ.2 லட்சம் வீதம், ரூ.4 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே போலீஸார் லட்சுமி நரசிம்மனை கைது செய்துள்ளனர். ஆனால் அவருக்கு ஆலந்தூர் நீதிமன்றம் கடந்த ஜூலை 13-ல் ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் கைது செய்யப்பட்ட 13 நாட்களில் ஆலந்தூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது எவ்வாறு சாத்தியம் எனத் தெரியவில்லை?
தற்போது மனுதாரர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மோசடியில் திரிவானாவுக்கும் பங்கு உள்ளது என்பதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அத்துடன் மனுதாரரின் கணவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய, விசாரணை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், "இதுபோன்ற மோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்கும்போது, கீழமை நீதிமன்றங்கள் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து, தக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.