Published : 16 Sep 2023 06:14 AM
Last Updated : 16 Sep 2023 06:14 AM

15-வது ஆண்டு நிறைவு விழா | 108 ஆம்புலன்ஸ் சேவையால் இதுவரை 1.55 கோடி பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இதுவரை 1.55 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் சேவையின் 15-வது ஆண்டு நிறைவு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்றுநடந்தது. விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 108 ஆம்புலன்ஸ் சேவையின் 15 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்த ராவ், இஎம்ஆர்ஐ ஜிஎச்எஸ் இயக்குநர் கே.கிருஷ்ண ராஜு, மாநில செயல் தலைவர் செல்வகுமார், துணைத் தலைவர் குமார் ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 2008-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி உயிர்காக்கும் உன்னத திட்டமான 108 அவசர கால ஊர்திசேவையை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

108 அவசரகால சேவை தமிழக அரசோடு இஎம்ஆர்ஐ என்கிற நிறுவனமும் இணைந்து உருவாக்கப்பட்ட திட்டமாகும். அந்த திட்டத்தின்படி 108 என்கின்ற எண்ணை தொடர்பு கொண்டு கட்டணமில்லா இலவச தொலைபேசி மூலம் அழைத்தால் பெரிய அளவிலான மருத்துவ சேவை இதன்மூலம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 99 இலவச தாய்சேய் ஊர்திகள், 195 இலவச அமரர்ஊர்திகள், 65 பச்சிளங்குழந்தைகளுக்கான அனைத்து வசதிகளும் கூடிய ஊர்திகள் என்று ஒட்டுமொத்தமாக 1,353 ஊர்திகள் இருந்தன. கடந்த ஆண்டு ரூ.108.28கோடி மதிப்பீட்டில் 283 புதிய வாகனங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் இன்று 1,353வாகனங்களும் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளன. பெருநகரங்களில் பெரிய அளவில் அவசரஆம்புலன்ஸ் சேவை வேண்டிஅழைத்தால் 11.57 நிமிடங்களுக்குள்ளும், கிராமப்புறங்களை 14 நிமிடங்களுக்குள்ளும் இந்தவாகனம் சென்று அவர்களை அழைத்துச் செல்கிறது.

சாலை விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு 12.01 நிமிடத்தில் இந்த சேவை கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவையில் பிரசவம், விபத்துஉட்பட மொத்தம் 1 கோடியே 54லட்சத்து 66,551 பேர் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x