Published : 25 Dec 2017 03:16 PM
Last Updated : 25 Dec 2017 03:16 PM

தினகரன் சட்டப்பேரவைக்குள் செல்லும்போது ஆட்சி மாறாது, காட்சிகள் மட்டுமே மாறும்: ஆதரவாளர் புகழேந்தி சூசகம்

தினகரன் சட்டப்பேரவைக்குள் செல்லும்போது ஆட்சி மாறாது, ஆனால் காட்சிகள் மட்டும் மாறும் என அவரது ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இடையே கோவையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அப்போது தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர் நினைவு தினத்தில் மற்றொரு சரித்திரம் நிகழ்ந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசி, சசிகலா வழிகாட்டுதலால் டிடிவி தினகரன் வெற்றி முகத்தோடு உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சியில் நடந்த அலங்கோலங்களே அவர்களின் தோல்விக்கு காரணம். ஆட்சியாளர்கள் இதை உணர வேண்டும்.

32 அமைச்சர்கள், எம்பிக்கள் இவர்களில் ஒரு சிலரைத் தவிர யாரும் எங்களுடன் இல்லை. எங்களிடம் கட்சி இல்லை, ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை. எங்களிடம் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள்.

நிராயுதபாணியாக நின்ற எங்களுக்கு சசிகலா தலைமையும், டிடிவி தினகரன் என்ற ஆளுமையுமே ஆயுதமாக இருந்தார்கள். அதுவே வெற்றியாக மாறியுள்ளது.

மதுசூதனன் தரப்பினர் எதிரிகள் அல்ல. அவர்களும் அதிமுகவினர்தான். மோசமாக தோற்றதாக அவர்கள் நினைக்க வேண்டியதில்லை. முதலமைச்சரும், சில அமைச்சர்களுமே அந்த தோல்விக்கு காரணம். ஒரு சிலரைத் தவிர யார் மீதும் எங்களுக்கு கோபமில்லை. சசிகலா வழியில், டிடிவி தினகரன் பின்னே அவர்கள் இணைய வேண்டும். இந்த வெற்றி அதிமுகவின் தன்மானத்தை காத்துள்ளது. தினகரன் சட்டப்பேரவைக்குள் செல்லும்போது ஆட்சி மாறாது, ஆனால் காட்சி மாறும்.

ஸ்லீப்பர்செல்களைப் பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. டெண்டர்களுக்காக உள்ள அமைச்சர்களைத் தவிர, உண்மையான தொண்டர்களைக் கொண்டுள்ள அமைச்சர்கள் டிடிவி தினகரன் பின்னே வந்துவிடுவார்கள். சரியில்லாத அமைச்சர்களை நீக்கிவைத்துவிட்டு, தனியே ஆட்சி நடத்தும் நிலை ஏற்படும். எல்லோரும் டிடிவி தினகரன் பின்னால் வந்துவிட்டால் எதற்காக ஆட்சி கலையப்போகிறது.

திமுக அரசியல் களத்தில் எங்கள் எதிரி. மனிதாபிமான முறையிலேயே 2ஜி தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அக்கட்சியை முகவரி இல்லாமல் செய்திருக்கிறோம். பாஜகவின் வாக்குகளை விட நோட்டா வாக்குகள் அதிகமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக பெயரைச் சொல்லி அரசியல் நடத்த முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x