Published : 15 Sep 2023 07:41 PM
Last Updated : 15 Sep 2023 07:41 PM

‘பாஜகவில் ஏன் இணையக் கூடாது?’ என செந்தில் பாலாஜியிடம் கேட்கவில்லை: அமலாக்கத் துறை தரப்பு மறுப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி (இடது), அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் (வலது)

சென்னை: "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என செந்தில் பாலாஜியிடம் எந்த நேரத்திலும், யாரும் கேட்கவில்லை. பிணை வேண்டும் என்பதற்காக, வேறு வலுவான வாதங்கள் இல்லாததால் இந்தப் பொய்யை செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் தற்போது முன்னெடுக்கிறார்கள்" என்று அமலாக்கத் துறை தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது?" என விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது என்று வாதிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞரான என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். அதன்பின், செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.

அமலாக்கத் துறை மறுப்பு: "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சொல்லியதற்கு உடனடியாக அமலாக்கத் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த சமயத்திலும் யாரும் கேட்கவில்லை. செந்தில் பாலாஜி அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பிணை வேண்டும் என்பதற்காக, வேறு வலுவான வாதங்கள் இல்லாததால் இந்தப் பொய்யை செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் தற்போது முன்னெடுக்கிறார்கள்" என்று அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் கூறியுள்ளார்.

முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கின் தீர்ப்பை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாசிக்க > ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது?’ என அமலாக்கத் துறை கேட்டதாக ஜாமீன் வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x