

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களை இன்றைக்கு இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத் துடிக்குது. இண்டியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்கு போகும்போது அங்கே வரக்கூடிய அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தினுடைய முதல்வர்களும் அரசு கொண்டு வருகின்ற திட்டங்களைப் பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு இனி மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இது உங்களுக்கான உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை” என்று அவர் பேசினார்.
திமுக திட்டத்தை வரவேற்று கோலமிட்ட அதிமுக கவுன்சிலர்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் சொக்காயி தன்னுடைய வீட்டின் முன்பு கோலமிட்டார். கவனம் ஈர்த்த இந்தச் சம்பவம், அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கவுன்சிலர் சொக்காயிடம் கேட்டபோது, "நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். என்னுடைய வார்டு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் திட்டத்தை வரவேற்றேன். அதற்கும், அரசியலுக்கும் என்ன இருக்கிறது" என்றார்.
“தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல... நம் உரிமை!”: "காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை. ‘கர்நாடகத்தில் மழை பெய்து ஏராளமாக தண்ணீர் வந்தால் மட்டும்தான் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும், குறைவாக தண்ணீர் இருந்தால், தண்ணீர் கொடுக்க முடியாது’ என்று கர்நாடகா சொல்ல முடியாது" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
செந்தில் பாலாஜி தரப்பு பரபரப்பு வாதம்: “நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது என்று ஜாமீன் கோரிய வழக்கில், அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்துள்ளார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கின் தீர்ப்பை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 29-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 6-வது முறையாகும்.
உதயநிதி மீது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு: சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று 6 ஆக அதிகரிப்பு: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள 39 வயதான நபருக்கு நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நிபாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்த முகமது அலி மற்றும் ஹரீஷ் ஆகியோரும் உள்ளடக்கம். தற்போதைய நிலவரப்படி சிகிச்சையில் 4 பேர் உள்ளனர் என்று கேரளா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: பயிற்சி மருத்துவர் காய்ச்சலால் உயிரிழப்பு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பசும்பரா பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 வருட மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்குக் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனையடுத்து, புதன்கிழமை காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் டைபாய்டு காய்ச்சல் என்றும், டெங்கு காய்ச்சல் இல்லை என்றும் முடிவு வந்துள்ளது.
மேலும், சிந்துவின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சல் இருக்குமா என்பதை பரிசோதிப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரத்த மாதிரி முடிவு வருவதற்கு முன்பே சிந்து சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவம், மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் 3-வது நாளாக தொடரும் ராணுவ நடவடிக்கை: ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் 3-வது நாளை எட்டிய நிலையில், தீவிரவாதிகள் பதுங்கிடக்கும் இடத்தைக் கண்டறிய ட்ரோன்களை ராணுவம் களமிறக்கியது. அதுமட்டுமல்லாது ட்ரோன் தகவல்களின்படி தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் பீரங்கி தாக்குதலும் நடத்தியது. முன்னதாக, அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் என்கவுன்ட்டரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்திருந்தது. மேலும், ஒரு ராணுவ வீரரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் சாசன அமர்வு குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும், சாமானியர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான வழக்குகளை விசாரிக்காது என்று நினைப்பது தவறு என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்ட நிலத்தை காலி செய்ய திமுக எம்.பி.க்கு உத்தரவு: சென்னை கோயம்பேட்டில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சொந்தமான வீ கேர் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, நிலத்தை காலி செய்யும்படி 2011-ம் ஆண்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கலாநிதி வீராசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “ஒரு மாதத்தில், மனுதாரர் அந்த நிலத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு காலி செய்து கொடுக்க தவறும்பட்சத்தில், நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.