Published : 11 Dec 2017 11:57 AM
Last Updated : 11 Dec 2017 11:57 AM

தமிழக மருத்துவ மாணவர்கள் போராட்டம்; அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்: வைகோ

போராட்டத்தில் ஈருபட்டுள்ள மருத்துவ மாணவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம் முழுவதும உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டப் பொது மருத்துவமனைகளில் பட்ட மேற்படிப்பு படித்துவரும் இளம் மருத்துவ மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் 28-ம் தேதி முதல் காலவரையற்ற அறப்போராட்டத்தில் ஈடுபட்டு-ள்ளனர்.

இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அன்றாட மருத்துவப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த மாதம் நேரடி நியமனங்களின் மூலம் 550 மருத்துவர்களை புதிதாக நியமித்து உள்ளது. அரசு மருத்துவர் நியமனங்களுக்கு ஏற்கனவே வழங்கி இருந்த விதிமுறைகள் எதுவும் இந்நியமனங்களில் பின்பற்றப்படவில்லை. இடஒதுக்கீடு முறை கணக்கில் கொள்ளப்படவில்லை.

முதுகலை மாணவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு ஆண்டுகள் கட்டாய மருத்துவச் சேவை ஆற்றி இருக்க வேண்டும் என்ற நடைமுறையும் இந்த புதிய நியமனங்களில் கணக்கில் கொள்ளப்படவில்லை. வருங்காலத்தில் கிராமப்புறச் சேவைக்கு அவசியம் இல்லை என்ற நிலை உருவாகும். ஏழை கிராமப்புற மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே அரசு நிர்ணயித்திருந்த விதிமுறைகளுக்கு புறம்பாக முதுநிலை மருத்துவர்களை நேரடியாக நியமனம் செய்ததை இரத்து செய்து, உரிய விதிமுறைகளைப் பின்பற்றி முதுகலை மருத்துவர் நியமனங்களை செய்திட வேண்டும்.

உயிர் காக்கும் சீரிய பணிகளில் ஈடுபட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அரசு அவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x