டெங்கு, நிபா வைரஸ் பாதிப்புக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை - பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

டெங்கு, நிபா வைரஸ் பாதிப்புக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை - பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: டெங்கு, நிபா வைரஸ் பாதிப்புக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த மாதத்தில் இதுவரை 230 பேரும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 128 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தென்காசி, திருவள்ளூர் உள்ளிட்ட 45 சுகாதாரமாவட்டங்களில், 25-க்கும் மேற்பட்ட சுகாதார மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 4,074 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கேரளாவில் தற்போதுநிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்குமற்றும் நிபா வைரஸ் சிகிச்சைகளுக்கு தனித்தனி வார்டுகள் ஏற்படுத்தி, சிகிச்சை அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் கண்டறியப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள், கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த இருமாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.

மேலும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு, காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் நிபா வைரஸ் பாதிப்புக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in