

திருவாரூர்: சனாதனம் குறித்த கருத்தரங்கில் மாணவர்கள் பங்கேற்பது குறித்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2 சுற்றறிக்கைகளும் திரும்பப் பெறப்படுவதாக திருவாரூர் திருவிக அரசு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் அண்ணா பிறந்த நாளான இன்று (செப்.15) சனாதனஎதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை பதிவு செய்யலாம் என அக்கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ராஜாராமன் செப்.12-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இதுபற்றி தகவல் பரவியதைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வரை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தனது சுற்றறிக்கை தவறாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது என தெரிவித்தபொறுப்பு முதல்வர் ராஜாராமன், நேற்று முன்தினம் (செப்.13) மற்றொரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், சனாதனம் குறித்த தங்களின் கருத்துகளை, தங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் மாணவர்கள் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, இவர்விடுத்த அறிக்கைகள் பேசுபொருளாகி இருந்த நிலையில், கல்லூரி பொறுப்பு முதல்வர் தரப்பில் நேற்று மற்றொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கடந்த செப்.12, 13-ம் தேதிகளில் வெளியிடப்பட்ட 2 சுற்றறிக்கைகளும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.