

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சுந்தரபுரி கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்படுகிறது. நேற்று காலை தொழிலாளர்கள் பாறையை பிளக்க இயந்திரங்கள் மூலம் துளையிட்டனர். பின்னர் துளையில் வெடி பொருட்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேல் பகுதியில் இருந்து சரிந்து விழுந்த கல் வெடிபொருட்கள் மீது விழுந்தது. இதில்உராய்வு ஏற்பட்டு வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் கல்குவாரியில் பணிபுரிந்த அரசம்பட்டியை சேர்ந்த நாராயணன் (60), சுந்தரபுரி கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ற மாத்யூ (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாறைக்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் (50), காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (60) காயமடைந்தனர். வெடிவிபத்து குறித்து வடமதுரை போலீஸார் விசாரிக்கின்றனர்.