அண்ணா பிறந்தநாளையொட்டி மதுரையில் இன்று மதிமுக மாநாடு - முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் வைகோ

அண்ணா பிறந்தநாளையொட்டி மதுரையில் இன்று மதிமுக மாநாடு - முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் வைகோ
Updated on
1 min read

மதுரை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் இன்று மதிமுக மாநில மாநாடு நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மாநாட்டில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரள்கின்றனர்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு மதிமுக சார்பில் மதுரை விமானநிலையம் அருகேயுள்ள வலையங்குளத்தில் இன்று மாநில மாநாடு நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பிற்பகல் 3 முதல் 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்த நாடு கோபு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மாநாட்டுத் திடலில் கட்சியின் கொடி ஏற்றப்படுகிறது. திராவிட இயக்கச் சுடரை உயர்மட்டக் குழு உறுப்பினர் செல்வராகவன், மாநாட்டு தலைவர் அர்ஜுனராஜ் ஆகியோர் ஏற்றுகின்றனர்.

மாநாட்டு தீர்மானங்களை மாவட்டச் செயலாளர்கள் மார்நாடு (மதுரை புறநகர்), ராமகிருஷ்ணன் (தேனி) முன்மொழிய, ஜெயராமன் (மதுரை புறநகர் தெற்கு), மனோகரன் (சிவகங்கை), சுரேஷ் (ராமநாதபுரம்) வழிமொழிகின்றனர்.

தொடர்ந்து பெரியார், அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகள் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. துணைப் பொதுச் செயலாளர் ராசேந்திரன் மாநாட்டை திறந்து வைக்கிறார். வரவேற்புக் குழு தலைவர் புதூர் பூமிநாதன் எம்எல்ஏ வரவேற்கிறார்.

மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செந்திலதிபன், துரை.வைகோ, மல்லை சத்யா, கணேசமூர்த்தி எம்.பி., எம்எல்ஏக்கள் சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) சின்னப்பா (அரியலூர்), ரகுராம் (சாத்தூர்) ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். பொதுச் செயலர் வைகோ மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் வைகோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதனால் இந்த அறிவிப்பு என்ன என்பதை அறிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று மாலை முதலே மதுரையில் குவிந்தனர்.

தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆலோசனையின் பேரில் டிஐஜி ரம்யா பாரதி மேற்பார்வையில் எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in