

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவும், 200 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டும் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ரத்த மாதிரிகளை சோதிப்பது, ரத்த தட்டுகள் கண்டறிவதற்கான வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை டீன் மணி தெரிவித் துள்ளார். மழைக்காலம் என்பதால், தமிழகத்தில் ஆங்காங்கே மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ள ஆத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு வார்டு குறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மணி கூறியது: சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது. மேலும், காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் கொண்ட வார்டு, கொசு வலை உள்ளிட்டவற்றுடன் அமைக்கப் பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, ரத்தத் தட்டுகள் எண்ணிக்கை குறையும் என்பதால், அதனை கண்டறிவதற்காக, சிறப்பு வார்டிலேயே, ரத்தத் தட்டுகள் எண்ணிக்கையை கண்டறியும் சிறப்பு கருவி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நோயாளிகள், ரத்தப் பரிசோதனை மையத்துக்கு சென்று வர வேண்டிய அவசியம் இன்றி, சிறப்பு வார்டிலேயே ரத்த தட்டுகள் எண்ணிக்கையை அறிந்து சிகிச்சை பெற முடியும். இதேபோல், ரத்த தட்டுகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து, ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ரத்த தட்டுகள், பிளாஸ்மா ஆகியவற்றை வழங்கு வதற்கும், சிறப்பு வார்டில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முது நிலை மருத்துவர்கள் கொண்ட குழு, டெங்கு சிறப்பு வார்டில் தொடர் சிகிச்சை வழங்கும் வகையில், பணி சுழற்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை, தொடர் கண்காணிப்பில் வைத்து, சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.