Published : 15 Sep 2023 06:26 AM
Last Updated : 15 Sep 2023 06:26 AM
ஆவடி: ஆவடி அருகே சேக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கீழ் பாலத்தை நேற்று பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தை அடுத்த சேக்காடு பகுதியில் ‘எண் - 9’ லெவல் கிராசிங் கேட்டை மாற்றி, ரயில்வே கீழ் பாலத்தை அமைக்க வேண்டும் என, சேக்காடு மற்றும் கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் சேக்காடு பகுதியில் ரயில்வே கீழ்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரயில்வே கீழ் பாலம் அமைக்கும் பணி, கடந்த 2006-2007-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் சேக்காடு ரயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ.20.58 கோடி மதிப்பிலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
400 மீட்டர் நீளம் மற்றும் 8.50 மீட்டர் அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அப்பணி, நில எடுப்பு பணி, கரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் மந்தமாக நடைபெற்று வந்தது. பிறகு, துரிதமாக மேற்கொள்ளப்பட்ட அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, சேக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கீழ்பாலம் திறப்பு விழா நேற்று தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நடைபெற்றது. இதில், அமைச்சர் எ.வ.வேலு, பங்கேற்று, சேக்காடு ரயில்வே கீழ்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், முன்னாள் அமைச்சரும், ஆவடி எம்எல்ஏவுமான சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT